அவசர, அவசரமாக 'ராணுவத்தை' தயார்படுத்தும் சீனா... பதிலடி கொடுக்க 'டோக்லாம் குழு'வை கையில் எடுத்த இந்தியா!
முகப்பு > செய்திகள் > இந்தியாஎல்லைப்பகுதியில் சீனாவை எதிர்கொள்ள இந்திய அரசு டோக்லாம் குழுவை கையில் எடுத்துள்ளது.
இந்திய-சீன எல்லைப்பகுதிகளில் ஒன்றான லடாக்கில் இந்த மாதம் முதலே சீன ராணுவம் பெரும் அட்டகாசங்களை செய்து வருகிறது. உச்சகட்டமாக இந்திய ராணுவத்தினரின் மீது அண்மையில் முள்கம்பிகள், கற்கள், கம்புகளை கொண்டு தாக்கினர். பதிலுக்கு இந்திய ராணுவமும் முறையான வழியில் சீன ராணுவத்தினரை எதிர்கொண்டு பதிலடி கொடுத்தனர். இதற்கிடையில் சீன அதிபர் ஜின்பிங் ராணுவத்தினரை தயார் நிலையில் இருக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும் லடாக் பகுதியில் இந்திய அரசு மேற்கொண்டு வரும் சாலை கட்டுமான பகுதிகளை நிறுத்துமாறு இந்தியாவுக்கு, சீனா தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது. இந்த நிலையில் சீனா ராணுவத்தை எதிர்கொள்ள டோக்லாம் குழுவை பிரதமர் நரேந்திர மோடி கையிலெடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.
முன்னதாக இந்தியா, பூடான், சீனா ஆகிய நாடுகளின் எல்லைகள் சந்திக்கக்கூடிய டோக்லாம் பகுதியில் 2017-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக சீனா படைகளைக் குவித்தது.
பதிலுக்கு இந்தியாவும் படைகளைக் குவித்தது. அதே நேரத்தில் பேச்சுவார்த்தையும் நடத்தியது. அதனால் போர் நடவடிக்கைகள் இன்றி அந்த விவகாரம் முடிவுக்கு வந்தது. எனினும் அந்த விவகாரம் 73 நாள்கள் நீடித்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த முறை சீனா அதிக உறுதியுடன் செயல்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் டோக்லாம் பிரச்சினை போல பேச்சுவார்த்தை வழியாக இந்த பிரச்சினையை முடிக்கலாம் என பிரதமர் மோடி நினைக்கிறாராம்.
சீனாவின் செயல்பாடுகளுக்குப் பதில் கொடுக்கும் விதமாக டோக்லாம் அணியை மீண்டும் மோடி களமிறக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படைகளின் தளபதி பிபின் ராவத் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர்தான் சீனா விவகாரத்தை தற்போது கையாளவுள்ளனர். ஆனால் என்ன மாதிரியான வழியில் அவர்கள் இந்த பிரச்சினையை கையாள போகின்றனர் என்பது குறித்து இதுவரை எந்த தகவல்களும் வெளியாகவில்லை.