ஜோதிகா, பாக்யராஜ், பார்த்திபன், தியாகராஜன், பாண்டியராஜன், பிரதாப் போத்தன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் 'பொன்மகள் வந்தாள்'. சூர்யா தனது 2டி எண்டர்டெயின்மென்ட் சார்பாக தயாரித்துள்ள இந்த படத்தை ஜேஜே ஃபெட்ரிக் இயக்கியுள்ளார்.
15 வருடங்களுக்கு முன்பு பெண் குழந்தைகளை கடத்தி கொலை செய்த, ஒரு சைக்கோ கொலைகாரியின் வழக்கை கையில் எடுக்கிறார் வழக்கறிஞரான வெண்பா பெத்துராஜ். அவருக்கு எதிராக களமிறங்குவது மிகவும் பலம் வாய்ந்த வழக்கறிஞர் ராஜரத்தினம். ஊரே எதிர்க்கும் ஒரு சைக்கோ கொலைகாரிக்கு ஆதரவாக, அதுவும் 15 வருடங்களுக்கு பிறகு வெண்பா ஏன் களமிறங்குகிறார் ? ராஜரத்தினத்தை தனது வாதத் திறமையால் வீழ்த்தி, வழக்கில் வென்றாரா ? என்ற கேள்விகளுக்கு விடை சொல்கிறது இந்த பொன்மகள் வந்தாள்.
தொடர்ச்சியாக பாலியல்ரீதியாக பெண் குழந்தைகள் துன்புறுத்தலுக்குள்ளாகும் சமூகத்தின் மிக முக்கிய பிரச்சனையை அடிப்படையாகக் கொண்டு திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர் ஃபெட்ரிக்.
வெண்பா வழக்கறிஞராக ஜோதிகா. கம்பீரமான தோற்றத்தில் அந்த வேடத்துக்கு சரியாக பொருந்துகிறார். அவருக்கு எதிராக, வழக்கமான தனது கம்பீரமான குரல், நக்கலான உடல்மொழி, ராஜரத்தினம் என்ற வக்கீலாக பார்த்திபன் சரியான தேர்வு. வெண்பாவின் அப்பாவாக பெட்டிஷ்ன் பெத்துராஜ் என்ற வேடத்தில் பாக்யராஜ், எமோஷனலான காட்சிகளில் தனது தேர்ந்த நடிப்பை வழங்கியிருக்கிறார்.
வரதராஜன் என்ற ஊர் பெரிய மனிதராக தியாகராஜன், ஜட்ஜாக பிரதாப் போத்தன், வழக்கறிஞராக பாண்டியராஜன், வினோதினி உள்ளிட்டோர் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள வேடங்களுக்கு நியாயம் செய்துள்ளனர்.
15 வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற சைக்கோ கொலைகாரியின் வழக்கிற்கும், வெண்பாவிற்கும் என்ன சம்மந்தம் என்ற கதையில் இருக்கும் மர்மம் முதல் பாதியை சுவாரஸியப்படுத்துகிறது. இருப்பினும் இரண்டாம் பாதிக்கு மேல் திரைக்கதையை இன்னும் வலுவாக அமைத்திருக்கலாம். காரணம், பெரும்பாலான காட்சிகள் முன்பே யூகிக்க முடிகிறது.