இந்த வருடம் கொரோனா இரண்டாவது அலை பரவ ஆரம்பித்த கடினமான சூழலில் தான் கணேஷ் விநாயகன் இயக்கிய ‘தேன்’ படம் வெளியானது. ஆனால் ரசிகர்களிடமும் விமர்சகர்களிடம் ஒரு சேர பாராட்டுக்களை பெற்றார். மேலும் பல தேசிய மற்றும் சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு பல பிரிவுகளில் பல விருதுகளை அள்ளி குவித்துள்ளது.

இந்த படத்தில் வேலு என்கிற கதாபாத்திரமாகவே மாறி இருந்த படத்தின் நாயகன் தருண் குமார். கடந்த சில மாதங்களுக்கு முன் 11வது தாதா சாகேப் பால்கே திரைப்பட விழாவில் இந்தப் படம் திரையிடப்பட்டதில், சிறந்த நடிகருக்கான விருதை வென்றார்.
இந்நிலையில், பீகாரில் நடைபெற்ற தர்பங்கா சர்வதேச திரைப்பட விழாவில் மீண்டும் ஒரு முறை சிறந்த நடிகர் விருதை பெற்றுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “ஒருவரின் கடினமான உழைப்புக்கு கிடைக்கும் விருது என்பது உண்மையில் அவருடைய வாழ்க்கையில் எப்போதும் பெற்றிராத சந்தோஷமான தருணங்கள் முக்கியமான ஒன்றாக இருக்கும்.. இது தேன் படத்திற்காக நான் இரண்டாவது முறையாக பெறும் விருது.. முன்னதாக தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான முதல் விருதை பெற்றேன்.
தற்போது தர்பங்கா சர்வதேச திரைப்பட விழாவில் எனது நடிப்பிற்கான அங்கீகாரம் கிடைத்து, அதற்காக இந்த சிறந்த நடிகர் விருது எனக்கு வழங்கப்பட்டது குறித்து இன்னும் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த படத்தில் நான் நடித்திருந்த வேலு கதாபாத்திரத்தில் நடித்தது மிகவும் கடினமான மற்றும் சவாலான ஒன்றாக இருந்தது. என் உடலில் உள்ள காயங்களும், தழும்புகளும் அந்த கடின உழைப்பை இன்னும் ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்கின்றன. நீங்கள் உங்களுடைய இதயத்தையும், ஆத்மாவையும் நூறு சதவீதம் நேர்மையாக உங்கள் கதாபாத்திரத்திற்கு கொடுக்கும் போது அது எல்லை கோடு களையும் கலாச்சாரங்களையும் தாண்டி மக்கள் இதயங்களை தொட்டுவிடும்.